தமிழகம்

அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று: காயல்பட்டினம் அரசு மருத்துவமனை முடக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினம் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த மருத்துவமனை முடக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காயல்பட்டினம் அரசு மருத்து வர் ஒருவர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கடந்த மாதம் 23-ம் தேதி திரும்பி வந்துள்ளார். அந்த மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

டெல்லியில் இருந்து திரும்பி வந்தபின் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவர் பணியாற்றிய காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் உள்ளிட்ட 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பணியாளர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் காயல்பட்டினம் மக்களின் நலன் கருதி நடமாடும் மருத்துவக்குழு தினமும் சிகிச்சை அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 1-ம் தேதி வரை சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT