ஊரடங்கு அமல்படுத்தும் பணி யை கண்காணிப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு தலா ஒரு எஸ்.ஐ. நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊரடங்கு பணி தொடர்பாக பல்வேறு அறிவுரை களை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்: ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் கனிவுடன் பேசவேண்டும். பொதுமக்கள் மீது தடியடி நடத்தக் கூடாது. வாக்குவாதம் செய்யும் பொதுமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து எச்சரித்து அனுப்புங்கள்.
மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவசர உதவி தேவைப்படு வோருக்கு உடனடியாக உதவ வேண்டும்.
போலீஸார் ரோந்து செல்லும்போது, உணவு கிடைக்காமல் சிரமப்படுவோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர் பற்றி தெரியவந்தால் நகர் நுண்ணறிவு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். வார்டுகளில் தங்களுடன் பணிபுரிய விரும்பும் தன்னார்வலர்கள் பெயர் பட்டியலை சேகரித்து, நுண்ணறிவு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினரை தன்னார்வலர்களாக தேர்வு செய்து பொதுமக்களுக்கு உதவ பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.