தமிழகம்

கேள்வியும் பதிலும்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொடர்பான இடர்மிகுந்த சூழலில் வாசகர்கள் பலரும் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்ற தடுமாற்றத்தையும் வெளியிட்டபடி இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நிபுணர்களிடம் கொண்டு சென்று உரிய பதிலைப் பெற்றுத் தர தயாராகிறது ‘இந்து தமிழ் திசை’! இதோ இங்கே அப்படி சில கேள்வி - பதில்கள்...

நானும் என் மனைவியும் தெரு வியாபாரிகள். இருவரும், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளோம்.எங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக வழங்க உள்ள கரோனா நிவாரண தொகை ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உண்டா? உண்டு எனில் அவற்றை எவ்வாறு பெறுவது?

தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் நலவாரிய அதிகாரி கூறும் பதில்:

தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு, குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் ரூ.1,000 நிவாரணத் தொகையுடன், கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும். ஆனால், இந்தத் தொகை நவாரியத்தால் வழங்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகத் துறையால் அந்தந்த நகராட்சியில் பதிவு செய்த நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. நடைபாதை வியாபாரிகள் சம்பந்தப்பட்ட நகராட்சியை தொடர்புகொண்டு நிதியுதவியை பெறலாம்.

நான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். தற்காலிகமாக திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தங்கியுள்ளேன். என்னால் தற்போது ஊருக்கு செல்ல முடியவில்லை. அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் எனக்கு வேண்டும். உதவித்தொகைகூட வேண்டாம். என்ன செய்வது?

உணவுத்துறை அதிகாரிகள் கூறும் பதில்:

தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்துவதாக இருந்தது. தற்போதைய சூழலில் அதை அமல்படுத்த முடியவில்லை. எனவே திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை வாங்க இயலாது. திருநெல்வேலியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மூலம் அங்கேயே வாங்கிக் கொள்ள முடியும். ஒருவேளை குடும்பத்தினர் அனைவரும் இங்கேயே இருக்கும் பட்சத்தில் அவற்றை வாங்க இயலாது. இதுபோன்ற பலரும் வெளியூர்களுக்கு சென்றுள்ள நிலையில், நிவாரணம் வாங்க முடியாமல் இருப்பதாக தகவல் வருகிறது. இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

வாசகர்களே…!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் எதற்கு விதிவிலக்கு உண்டு; என்னென்ன செயல்களில் ஈடுபட அனுமதி கிடைக்கும்; எதனைச் செய்யலாம் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பதில் உங்களுக்கும் இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கேள்வியாக அனுப்பினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அல்லது நிபுணர்களின் பதில்களுடன் பிரசுரம் செய்யப்படும்.
இதுபோன்ற சந்தேகங்களை வாசகர்கள் press.release@hindutamil.co.in என்ற மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பலாம். மேலும் 044-42890002 என்ற ‘உங்கள் குரல்’ எண் வழியாகவும் கேட்கலாம்.

SCROLL FOR NEXT