கரோனா சம்பந்தமான சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக, தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை நோய் பரவலைத் தடுக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வீடு வீடாகச் சென்று கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தும் முதியவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவோர் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்வதற்கும் அவர் மூலம் பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கும் இக்கணக்கெடுப்பு அவசியமானதாகிறது.
நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கமாக உள்ளதால் சுகாதாரத் துறையின் இந்த கணக்கெடுப்பிற்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு பணியாளர்கள் நம் வீடுகளை நோக்கி வரும்போது நம்மிடம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவலை கட்டுப்படுத்திட அரசு மற்றும் சுகாதாரத்துறைக்கு நாம் உதவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.