பிரதமர் தன்னிடம் தொலை பேசியில் பேசியதாகவும் ஊரடங்கை ஏப் 14 க்குப்பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று காலையிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா, மன்மோகன் சிங், மம்தா, முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், தேவகவுடா உள்ளிட்ட பல மாநில தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினார். அன்புமணி ராமதாஸுடனும் இன்று மாலை பேசியுள்ளார்.
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ் இருவரும் தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து கொடுக்கும் அறிக்கைகள் மருத்துவ ரீதியாகவும், வரும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
லாக் டவுன் வேண்டும் என்பதை கடந்த மாதம் ஆரம்பத்திலேயே இருவரும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். ஸ்க்ரீன் டெஸ்ட், படுக்கைகள், சமுதாய விலகம், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முன் கூட்டியே கணித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இன்றும் அதிவேக ரத்த பரிசோதனை அவசியம் என ராமதாஸ் அறிக்கைவிட, கரோனா பாதிப்பு இந்தியாவில் இளைஞர்களுக்கே அதிகம் , ஆட்டம் போடாதீர்கள் வீடடங்குங்கள் என அன்புமணி ராமதாஸும் அறிக்கை விட்டனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் பல்வேறு தலைவர்களுடன் பேசிய அடிப்படையில் அன்புமணி ராமதாஸுடனும் பேசினார், அப்போது ஊரடங்கை ஏப்.14-க்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு:
“இந்திய பிரதமர் இன்று மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன்.
கரோனா பரவல் முழுமையாக தடுக்கப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டேன். இதுகுறித்த கூடுதல் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமர் கோரினார். அவை விரைவில் வழங்கப்படும். உலக அளவில் கரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.