தமிழகம்

கோவில்பட்டி அருகே வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு காவல்துறை உதவி

செய்திப்பிரிவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்பட்டி அருகே வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு காவல்துறையினர் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிக்கொடுத்து உதவி செய்தனர்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24-ம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் ஏராளமான தினக்கூலி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இவர்களை கண்டறிந்து தன்னார்வலர்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் அருந்ததியினர் காலனியை சேர்ந்த 25 குடும்பங்கள் வறுமையில் தவித்து வருவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் எம்.ஐயப்பனுக்கு தகவல் கிடைத்தது. விவசாய தினக்கூலி தொழிலாளர்களாக இவர்களுக்கு உதவிடும் பொருட்டு தனது நண்பர்கள் உதவியுடன், 25 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, ரூ.500-க்கு மளிகை பொருட்கள் வாங்கினார்.

நேற்று முன்தினம் மாலை ஆவல்நத்தம் சென்ற காவல் ஆய்வாளர் ஐயப்பன் அங்குள்ள மக்களின் வீட்டுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கினார். பொருட்களை பெற்றுக்கொண்ட அவர்கள், ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தனர். வறுமையில் தவித்த குடும்பங்களுக்கு உதவி செய்த தகவல் அறிந்து ஆய்வாளர் ஐயப்பனை பலரும் பாராட்டினர்.

SCROLL FOR NEXT