கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர் எழுதி பாடிய விழிப்புணர்வு பாடலுக்கு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வரவேற்பை பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க அரசு நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவை மாநகர், கோவைப்புதூரில் உள்ள 4-ம் நிலை தமிழ்நாடு சிறப்புக்காவல் படை காவலர் புஷ்பராஜ் பாடல் வரிகளை எழுதி, பிரபல பாடலின் பின்னணி இசையைப் பயன்படுத்தி, வீடியோ பாடலை இயற்றியுள்ளார்.
‘‘ வீட்டுக்குள் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கனும். அண்டை வீட்டுக்கும், ரோட்டுக்கும் போவதை தவிர்த்திடனும், உங்க சுத்தமில்லாத கையும், பாதுகாப்பில்லாத வாழ்வும் கரோனா காய்ச்சலை வரவழைக்கும்,’’ எனத் தொடங்கி 4 நிமிடம் 2 விநாடி ஓடக்கூடிய அந்த வீடியோ பாடல் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
சாலைகளில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தனித்து இருக்க வேண்டும் ஆகியவை குறித்து தனது பாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவலர் வெ.புஷ்பராஜ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ எனது சொந்த ஊர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி. 2016-ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தேன். தற்போது கோவைப்புதூர் 4-ம் நிலை சிறப்புக்காவல் படையில் பணியாற்றி வருகிறேன்.
மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளேன். சிறு வயதில் இருந்தே பாட்டுப் பாடுவதில் ஆர்வம் அதிகம். பள்ளியில் பாடியுள்ளேன். வேலைக்கு வந்த பின்னர், காவலர் சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பாடுவேன். வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் பலவித நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு, காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றவும், சுத்தமாக கைகளை கழுவவும், சாலைகளில் சுற்றுவதை தவிர்க்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளேன்.
இதற்கான பாடல் வரிகளை எழுதி, சிறப்பு செயலி மூலம் இசையை மட்டும் ஒலிக்கச் செய்து, நான் வீடியோ பதிவாக இந்த பாடலை பாடியுள்ளேன். இதை என் நண்பருக்கு பகிர்ந்தேன். அதைக் கேட்ட அவர் விழிப்புணர்வு பாடல் அருமையாக உள்ளது எனக்கூறி அனைவருக்கும் பகிர்ந்தார். எனது இந்த முயற்சிக்கு உயர் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்’’ .
என்று தெரிவித்தார்.