கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் நின்றதால், நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. 
தமிழகம்

தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் நின்றதால் காய்ந்து கருகும் நெற்பயிர்கள், காய்கறிகள் தோட்டம் : 50 கிராம மக்கள் சோகம்

எஸ்.கே.ரமேஷ்

தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் நின்றதால், நெற்பயிர்கள், காய்கறித் தோட்டங்கள் காய்ந்து வருவதாக 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக, கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி ஒன்றியம் கூலியம் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து கால்வாய் வழியாக கூலியம் ஏரி, எண்ணேகொள், அம்மனேரி, ஒம்பலக்கட்டு, கங்கலேரி, செம்படமுத்தூர், கும்மனூர், தாசரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வரும்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளது. இதனால் இந்த தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வந்த 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் மற்றும் காய்கறிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நெல் அறுவடைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வராததால், நெற்பயிர்களும், காய்கறித் தோட்டங்களும் முற்றியும் காய்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் ஆழ்துளைக்கிணறு மற்றும் ஏரியில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளன. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் விவசாய பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கெலவரப்பள்ளி அணையில் இருந்து 15 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விட்டு, பயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT