சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 2 முதியவர்கள் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் நிர்வாகத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
தமிழகத்தில் முதல் கரோனா தொற்று, மார்ச் மாத ஆரம்பத்தில் காஞ்சிபுரம் பொறியாளருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் 6-ல் 6 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 22-ம் தேதி 9 ஆக உயர்ந்தது. மார்ச் 29-ம் தேதி வரை 50 என்கிற அளவில் இருந்த எண்ணிக்கை மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ,2 , 3, 4 ஆகிய தேதிகளில் முறையே 67,124, 234,309,411, 485 என்கிற எண்ணிக்கையில் எகிறியது. இதில் 7 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் முதன்முதலில் உயிரிழந்தார். இந்நிலையில நேற்று காலை 7 மணி அளவில் விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேப்போன்று நேற்று ஒரே நாளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3-வது நோயாளி முதல் முறையாக ஒரு பெண் தேனியைச் சேர்ந்த கரோனா பாசிட்டிவ் நபரின் மனைவி (53), தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் நேற்று பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்நிலையில் இன்று தமிழக பொது சுகாதாரத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது..
இதுகுறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு:
“ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது ஆண் ஏப்ரல் 2 அன்று காலை 9 மணி அளவில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அன்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார் அவரது மரணத்துக்கு காரணம் வைரஸ் தொற்று என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த கரோனா பாசிட்டிவ் 60 வயது ஆண் ஏப்ரல் 1 அன்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று(5/4) அதிகாலை 1.45 மணிக்கு உயிரிழந்தார்”.
இவ்வாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதில் ஒருவர் டெல்லிச் சென்று திரும்பியவர் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 485 பேர். 7 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் டெல்லி சென்று வந்தவர்கள், ஒருவர் டெல்லிச் சென்று வந்த நபருடன் தொடர்புடைய அவரது மனைவி ஆவார்.