வீட்டில் இருங்கள்- சாலையில் நடமாட வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு ஓவியர்கள் கரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வு ஓவியத்தை பிரம்மாண்டமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் விழிப்புணர்வுக்காக வரைந்துள்ளனர்.
மக்கள் சாலையில் வரவேண்டாம் என்று அரசாங்கம் எவ்வளவு வலியுறுத்தியும் இரண்டு சக்கர வாகனங்களில் சாலையில் செல்வதும் காவல்துறை சொல்லியும் கேட்காமல் சாலையில் நடமாடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த ஆபத்தை உணர்த்தும் வகையில் புதுச்சேரியைச் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கரன், முருகன், அசோக், பனுரால் ஆகிய நான்கு ஓவியர்கள் புதுச்சேரி கடலூர் சாலையில் பிரம்மாண்ட கரோனா வைரஸ் பரவல் ஓவியங்களை விழிப்புணர்வுக்காக வரைந்து உள்ளனர்.
ஓவியர்கள் தரப்பில் கூறுகையில், "மொத்தமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வரைந்து வருகிறோம். மக்கள் சாலையில் சென்றால் என்ன நடக்கும் எந்த மாதிரி பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதை வலியுறுத்தி நாங்கள் இந்த ஓவியத்தை வரைந்து வருகிறோம் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் சாலையில் சென்றால் வைரஸ் தாக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வரவேண்டும் என்றே வலியுறுத்தி இந்த ஓவியங்களை நாங்கள் வரைந்து வருகிறோம்" என்று குறிப்பிட்டனர்.