தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று நேற்று மருந்து, மாத்திரைகளை வழங்கும் ஊர்க்காவல் படைவீரர். 
தமிழகம்

தொலைபேசி, வாட்ஸ்அப்-ல் தெரிவித்தால் வீடு தேடி வரும் மருந்து, மாத்திரை- முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல் துறை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அழைத்து தெரிவித்தால் மருந்து, மாத்திரைகளை வாங்கி வீடுகளுக்கே கொண்டு சென்று போலீஸார் வழங்கி வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மருந்துக் கடைகளுக்கு வருவதை தவிர்க்கவும், மருந்துக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், மருந்து மற்றும் மாத்திரைகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் முறையை கும்பகோணம் காவல் துறையினர் நேற்று அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அதன்படி, கும்பகோணம் நகரின் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் செல்போன் எண்ணுக்கு (94899 52302) அழைத்தோ அல்லது 97917 22688, 63831 08227 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ் அப்-ல் நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை டைப் செய்து அனுப்பி வைக்கலாம். டைப் செய்யத் தெரியவில்லை என்றால் மருந்துச் சீட்டை புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்கலாம்.

அந்த மருந்துகளை நோயா ளிகள் குறிப்பிடும் அதே மருந்துக் கடைகளில் வாங்கி அவற்றை உரியவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கும் முறை நேற்று தொடங்கப்பட்டது. இப் பணிக்காக ஊர்க்காவல் படை குழுவினர் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் கூறிய தாவது: இத்திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் கூறும் மருந்துகளை அவர்கள் கூறும் மருந்துக் கடைகளில் பெற்று வீடுகளுக்கு கொண்டு சென்று தருகிறோம். சந்தேகம் இருந்தால் மருந்துக் கடை பணியாளரிடம் உரியவரை பேசச் செய்து, அவர்கள் கூறும் மருந்தை வாங்கிக் கொடுத்து வருகிறோம். இப்பணியில் 12 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள் ளனர் என்றார்.

SCROLL FOR NEXT