சென்னை புதுப்பேட்டையில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று ட்ரோனில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திய போலீஸார் 
தமிழகம்

சென்னையில் எண்ணூர், புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 22 பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 22 இடங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்று அதிகம் உள்ள எண்ணூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை, பெரம்பூர், அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், போரூர், ஆலந்தூர், கோட்டூர்புரம், திருவான்மியூர், மடிப்பாக்கம், பனையூர் ஆகிய 22 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் போலீஸாரின் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்குச் செல்லவோ, வெளியே வரவோ யாருக்கும் அனுமதி இல்லை. இப்பகுதிகளின் எல்லைகளை மூடி போலீஸார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்த தெருக்களின் எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த தெருக்களில் வசிப்பவர்கள் பக்கத்து தெருக்களுக்குக் கூட செல்ல முடியாது.

மேலும், இப்பகுதிகளை ட்ரோன்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பதோடு, அதில் பொருத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கையும் விடுக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள கடைகள் காலையில் மட்டும் திறந்திருக்கும். அந்த பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள்மட்டும் வெளியே சென்று பொருட்களை வாங்கி வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள மக்களுக்கு போலீஸார் மற்றும் மாநகராட்சி, சுகாதாரத் துறை அதிகாரிகளின் தொலைபேசி தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. அவசர மருத்துவ சிகிச்சையைத் தவிர மற்ற எந்த காரணங்களுக்காகவும் அப்பகுதியினர் வெளியில் செல்ல முடியாது.

SCROLL FOR NEXT