படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த 38 பேருக்கு சிகிச்சை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா பாதித்த 38 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகரில் 27 பேர், மாவட்டத்தில் 7 பேர், தென்காசி மாவட்டத்திலிருந்து 2 பேர், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 2 பேர் என்று மொத்தம் 38 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களில் ஒருநபர் மட்டுமே துபாயிலிருந்து வந்தவர். மற்ற அனைவரும் டில்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள். அரசு மருத்துவமனையில் தற்போது வேறுயாரும் தனிவார்டுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதால் அங்குள்ள 34 ஆயிரம் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களக்காடு பகுதியில் 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருப்பதால் அங்குள்ள 8 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தம் 4500 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் தயாரிக்க மூலிகைகள் அடங்கிய பொட்டலங்கள் அளிக்கப்படுகிறது. பலர் தாமாக பரிசோதனைக்கு முன்வருகிறார்கள்.

அவர்கள் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் தெரியவந்திருக்கிறது. அடுத்த 10 நாட்கள் முக்கியமான காலகட்டம். ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்தால் சமூக பரவல் இல்லாமல் தடுத்துவிடலாம். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை இல்லை என்று ஆட்சியர் தெரிவித்தார்.

1071 பேர் மீது வழக்கு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1071 பேர் மீது 721 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 479 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் திருநெல்வேலி மாநகரில் மட்டும் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

SCROLL FOR NEXT