நாகர்கோவிலில் கரோனா தொற்றை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ரூ.100, 150, 200 என்ற மூன்று விலைகளில் காய்கறி தொகுப்புகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று மாநகராட்சியினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் உள்ளாட்சி துறையினர் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதியம் இரண்டரை மணி வரை மளிகைக்கடை, காய்கறி கடைகள் அனுமதிக்கப்படும் நேரங்களில் சமூக இடைவெளியையும் மீறி முக்கிய இடங்கில் கூட்டம் அதிக அளவில் கூடுகிறது.
இவற்றை சீர்செய்யும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வடசேரி பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தை, மற்றும் பிற காய்கறி கடைகளில் கூட்டம் அதிக அளவில் வருவதால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வந்தது.
ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் 5 பேர் காரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாநகராட்சி வாகனங்களில் காய்கறிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் வழங்கினர்.
அத்தியாவசியமான தக்காளி, வெங்காயம், உருளைகிழங்கு உட்பட 11 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொட்டலமிடப்பட்டு வழங்கப்பட்டது.
இவை ரூ.100, ரூ.150, ரூ.200 என்ற 3 வகை தொகுப்புகளில் வழங்கப்பட்டது. நாகர்கோவில் இளங்கடை, கரியமாணிக்கபுரம், கோட்டாறு, இளங்கடை போன்ற பகுதிகளில இந்த காய்கறி தொகுப்புகள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டன.
தொடர்ந்து நகரப் பகுதிகளில் சுழற்சி முறையில் இந்த காய்கறிகளை விற்பனை செய்ய நகராட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வீடுதேடி சென்று காய்கறி விற்பனை செய்யும் நடைமுறை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.