படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

தோட்டக்கலை முயற்சியால் மதுரையில் 5 வகை பழங்கள் கொண்ட பை விற்பனை தொடக்கம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் தோட்டக்கலை முயற்சியால் இன்று முதல் 5 வகை பழங்கள் கொண்ட பையும் நடமாடும் வாகனங்களில் கொண்டு விற்கப்படுகிறது.

‘கரோனோ’ வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு உள்ளதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி, தோட்டக்கலைத்துறை இணைந்து மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் தலா ஒரு வண்டி மூலம் 16 வகையான காய்கறிகள் கொண்ட பைகள் ரூ.200 மதிப்பிற்கு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் கொண்டு சென்று விற்க ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நடைமுறையில் தற்போது காய்கறிகளை போல், பன்னீர் திராட்சை, கொய்யா, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற 5 வகையான பழங்கள் கொண்ட பைகள் நடமாடும் வாகனங்களில் விற்பனை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறியதாவது: இந்த முயற்சியில் மதுரை மாநகராட்சியுடன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணைந்து பொது மக்களுக்கு உதவி வருகிறது.

மதுரை தோட்டக்கலைத்துறை நண்பர்களாக செயல்படடு வரும் கூட்டுப்பண்னையத் திட்ட உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்கள், உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் தோட்டக்கலை தன்னார்வ விவசாயிகள் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர், காய்கறிகள்,பழங்கள் விற்க அனுமதி வழங்கியுள்ளார்.

பைகளில் வைத்து விற்பனை செய்வதால் சமூக விலகல் உறுதி செய்வதுடன் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT