தமிழகம்

வத்தலகுண்டு பகுதியில் பூக்களை பறித்து மாடுகளுக்கு தீவினமாக்கும் பரிதாபம்: பல லட்சம் இழப்பை சந்திக்கும் பூ விவசாயிகள்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பூக்களைப் பறித்து மாடுகளுக்கு தீவினமாக கொடுக்கும் பறிதாபநிலைக்கு பூ விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பூவிவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பூ விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.

ஊரடங்கு காரணமாக பூ மார்க்கெட் இயங்காதது, வாகன போக்குவரத்து இல்லாததால் மலர்ந்த பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டுசெல்லமுடியவில்லை. இதனால் பலர் பூக்களை பறிக்கும் கூலி கூட கட்டாது என்பதால் செடியிலேயே விட்டுவிட்டனர்.

வத்தலகுண்டு அருகே நாடகோட்டை கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை பறிக்கமுடியாமலும், விற்பனைக்கு கொண்டுசெல்லமுடியாமலும் தவித்துவருகின்றனர்.

இதுகுறித்து பூ விவசாயி தவராஜ் கூறியதாவது:

ஒட்டுமொத்த கிராம வாழ்வாதாரமும் பூ விவசாயத்தை நம்பியே உள்ளது. தற்போதைய நிலையில் பயிரிட்டுள்ளவர்கள் முதல் கூலித்தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். செடியில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. செடியிலேயே கருகிவிடுகிறது.

இவற்றிற்கு செலவுசெய்த தொகையை கூட எடுக்கமுடியாதநிலை உள்ளது. இதனால் பூக்களை பறித்து கால்நடைகளுக்கு தீவினமாக போடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சீசன் காலம் என்பதால் ஒரு கலோ சம்பங்கி பூ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையாகும். இதனால் பூ விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அன்றாட வாழ்வாதாரத்தை கூட காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளோம். நாள்தோறும் 100 டன்னுக்கு மேலாக சம்பங்கி பூக்கள் வீணாகிவருகிறது. இவற்றை அரசே கொள்முதல் செய்து நறுமண தொழிற்சாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யவேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT