கோப்புப் படம் 
தமிழகம்

போலியாக கபசுரக் குடிநீர் தயாரித்து விற்பனை: ஆய்வில் சித்த மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சித் தகவல் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கபசுரக் குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ‘கரோனா’ வராமல் தடுக்கலாம் என்ற தகவல் பரவுவதால் தற்போது வணிக நோக்கில் வியாபாரிகள் இந்த சித்த மருந்தை போலியாக தயாரித்து விற்பது அதிகரித்துள்ளது.

இதை கண்டுபிடித்துள்ள சித்த மருத்துவ அதிகாரிகள், போலி விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் ‘கரோனா’ வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 411 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை, விழுப்புரத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உலகளவில் அலோபதி மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பாரம்பரிய சிகிச்சை முறை மருத்துவத்தில் இந்த நோயை குணப்படுத்தும் முயற்சிகளும் மற்றொருபுறம் நடக்கிறது.

இதில், சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கபசுர குடிநீரை, குடித்தால் ‘கரோனா’ வராமல் தடக்க முடியும் என்ற தகவல் பரவுவதால் தற்போது மக்கள் இந்த நோயிலிருந்து தற்காத்து கொள்ள இந்த சித்த மருத்துவத்தை வாங்கி காய்ச்சிக் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதனால், அரசு சித்த மருத்துவமனைகள், தனியார் சித்த மருத்துவமனைகள் மற்றும் அதன் விற்பனை நிலையங்களில் கபசுரக்குடிநீருக்கு மவுசு அதிகரித்துள்ளது.

தற்போது தனியார் கடைகளில் பலர் இந்த மருந்தை சரியான சித்த மருத்துவப்பொருட்கள் சேர்த்து தயாரித்து வழங்காமல் போலியாக பல பொடிகளை கொண்டு தயாரித்து விற்பனை செய்வதாக சித்தமருத்துவஅதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மதுரையில், போலியாக கபசுரக்குடிநீர் தயாரித்து விற்பனை செய்ததை ஆய்வில் மதுரை மற்றும் தேனி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரும், இந்திய சித்த மருந்து ஆய்வாளருமான மாரியப்பன் உறுதி செய்துள்ளார்.

அவர் கூறியதாவது:

ஆடாதொடை, கற்பூரவள்ளி, சுக்கு, திப்லி, நீலவேம்பு உள்ளிட்ட 15 வகை மூலிகைகளை கொண்டு இந்த கபசுரக்குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சளி தொந்தரவு, சுவாசப்பிரச்சனைகளை இது சீர் செய்கிறது. அதனால், ‘கரோனா’வுக்கு இந்த மருந்தை பயன்படுத்த சித்த மருத்துவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அதனால், மக்கள் தற்போது இந்த மருந்தை அதிகளவு வாங்கி குடிக்க ஆரம்பித்துள்ளனர்.

தனியார் சித்த மருத்துவவிற்பனையாளர்கள் பலர், கிடைக்கிற பொடிகளை போட்டு முறைப்படி தயாரிக்காமல் பெயரை மட்டும் கபசுர குடிநீர் என்று போலியாக விற்பனை செய்கின்றனர்.

அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தொலைபேசி எண், முகவரி எதுவும் இல்லை. மக்களும் அறியாமையால் ‘கரோனா’ நோயிலில் இருந்து தங்களை காப்பாற்றுக் கொள்ள, சில விற்பனையாளர்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யும் கபசுரக்குடிநீரை வாங்கி குடிக்கின்றனர்.

பொதுமக்கள் நம்பி ஏமாறக்கூடாது. பெயர், முகவரி, தொலைபேசி, உற்பத்தி செய்தி, காலாவதி தேதி, லைசன்ஸ் தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்கி குடிக்க வேண்டும்.

நாங்கள் கைப்பற்றிய போலி கபசுர குடிநீரை எடுத்து அரசு கவனத்திற்கு அறிக்கையாக தயார் செய்து அனுப்பி உள்ளோம். சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளோம். அரசு சித்த மருந்துவமனைகளில் ஒரு கிலோவே ரூ.250க்குதான் விற்கிறோம்.

ஆனால், தற்போது அரசு இந்த மருந்து தேவை உள்ளோருக்கு மட்டுமே வழங்க சொல்லியுள்ளது. அதனால், எல்லோருக்கும் இந்த மருந்துகொடுப்பதில்லை. இதை பயன்படுத்தி, தனியார் சிலர் போலியாக இந்த மருந்தை தயார் செய்து 50 கிராமே ரூ.200, ரூ.300 என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT