மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மலர்களை விற்க முடியாமல் செடியைக் காக்க அதிலிருந்து மலர்களைப் பறித்துக் கீழே கொட்டும் அவலம் புதுச்சேரி கிராமப்பகுதிகளில் நிலவுகிறது. 'விளைந்தும் பயனில்லை' என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி அருகே திருக்கனூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. அதுபோல் மலர் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கிராமப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மலர்களை நகரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அறுவடை செய்யும் மலர்கள் அனைத்தும் பறித்துக் கீழே கொட்டப்படுகிறது.
திருக்கனூரைச் சேர்ந்த ஜஹாங்கிர் என்ற விவசாயி இரண்டு ஏக்கரில் ரோஜா மற்றும் சம்பங்கி மலர் பயிரிட்டுள்ளார். தற்போது மலரைப் பறித்துக் கீழே போடும் சூழல் தொடர்பாக அவர் கூறுகையில், "மலர்கள் செடியிலேயே இருந்தால் அந்தச் செடி வீணாகிவிடும் என்பதால் மலர்களைப் பறித்துக் கீழே கொட்டுகிறோம்.
மலர்களைப் பறிக்கும் கூலி விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்தச் செடியை வெட்டி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு இரண்டு மாதங்களுக்குப் பிறகு செடி வளர்ந்து பூப்பூக்கும்.
மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பூ விவசாயத்தில் ஈடுபடும் கூலித் தொழிலாளி முருகன் கூறுகையில், "பூ அறுவடை செய்யும் கூலித் தொழிலாளர்கள் கிராமங்களில் ஏராளமானோர் உண்டு. தினந்தோறும் ரூபாய் 200 கிடைத்து வந்தது. அது தற்போது கிடைக்கவில்லை. அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, விளைவித்த பூக்களை அறுவடை செய்து, விற்பனை செய்ய முடியாமல் விளைந்தும் பயனில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது வேதனை தருகிறது என்கின்றனர் கிராம மக்கள். மலர்கள் மலர்ந்தும் கிராம விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வு கரோனாவால் உதிர்ந்து போகிறது.