ஊரடங்கால் புதுச்சேரியில் அரிசி விலை எட்டு ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்து விலைகள் அதிகரிக்கும் நேரத்தில் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தால் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல மாதங்களாகச் செயல்படாததால் மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கும் மத்திய அரசின் திட்டம் அமலாவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள சூழலில் புதுச்சேரியில் அரிசியின் விலை சந்தையில் கடுமையாக அதிகரித்துள்ளது. சாப்பாட்டு அரிசி ரூ.8 வரையிலும், இட்லி அரிசி ரூ.5 வரையிலும் மொத்த விற்பனைக் கடைகளிலேயே உயர்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக, அரிசி வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் கூறுகையில், "கிலோ ரூ.50க்குக் கிடைத்த கர்நாடக பொன்னி தற்போது ரூ.58க்கு விற்கப்படுகிறது. அதேபோல், இட்லி குண்டு அரிசி ரூ.30-ல் இருந்து ரூ.35க்கு விற்கப்படுகிறது.
இதுபோல் அனைத்து வகை அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. பத்து நாட்களுக்குள் அதிக வித்தியாசம் எழுந்துள்ளதால் நடுத்தர, ஏழை மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். வரத்து குறைவால் விலை உயர்த்தியதாக குறிப்பிட்டாலும், கடும் விலை உயர்வை அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். கரோனாவால் நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கிடைத்தாலும் அரிசி, மளிகை விலை உயர்வால் இத்தொகை போதாது" என்று தெரிவித்தனர்.
இதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மானிய விலையில் அரிசு, கோதுமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அரிசி, கோதுமை குறைந்த விலையில் பல மாநிலங்களில் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை கிலோ ரூ.2க்கும், அரிசி கிலோ ரூ.3க்கும் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கால் 3 மாதங்களுக்கு இவ்விலையில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இத்திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக, அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மொத்தம் 3.44 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1.78 லட்சம் சிவப்பு அட்டைத்தாரர்கள்தான்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மொத்தம் 373 ரேஷன் கடையில் 648 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தொடர்ந்து பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. அரசு ரேஷனில் அரிசி வழங்க முயற்சித்தது.
ஆளுநரின் உத்தரவுப்படி, ரேஷனில் அரிசிக்குப் பதிலாக நேரடி பணப் பரிமாற்றம் முறையால் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்படவில்லை. இதனால் இத்திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது" என்று தெரிவித்தனர்.