சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக, கரூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி கடைகள் இன்று (ஏப்.4) முதல் மூடப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக வீடுகளுக்கே நேரடியாக சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில், நடமாடும் காய்கறி அங்காடி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கு 25 வாகனங்களிலும், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கு 5 வாகனங்களிலும் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்பட்டு வீதி வீதியாகச் சென்று வீடுகளிலேயே காய்கறிகள் விற்கப்படுகின்றது.
இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடமாடும் காய்கறி அங்காடிகள் வீதிகளுக்கு வரும் போது பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடித்து ஒவ்வொருவராக காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.