நாக்பூரில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து வரும்போது, தெலங்கானா மாநிலத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் பள்ளிபாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கிருஷ்ணா நகரைச்சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரது மகன் லோகேஷ் (23). மெக்கானிக்கல் பட்டயப் படிப்பினை முடித்துள்ள இவர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய கடந்த மாதம் 14-ம் தேதி சென்றார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நாக்பூரில் இருந்து கடந்த 31-ம் தேதி பள்ளிபாளையத்துக்கு லோகேஷ் புறப்பட்டார். எனினும், வாகனம் ஏதும் கிடைக்காததால், தன்னுடன் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த 25 பேருடன் லோகேஷ் 100 கிமீ தூரம் நடந்து வந்தார்.
பின்னர், வழியில் கிடைத்த லாரி ஒன்றில் லோகேஷ் உள்ளிட்ட 25 பேரும் பயணித்து, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை அடுத்த மாரேட்பள்ளி வந்தனர்.
அப்போது, அவர்களை காவல் துறையினர் மீட்டு, அங்குள்ள முகாமில் தங்க வைத்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி லோகேஷூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, செகந்திராபாத் மாவட்ட வருவாய் துறையினர் மூலம் லோகேஷின் உடல் பள்ளிபாளையம் கொண்டு வரப்பட்டு நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், லோகேஷின் குடும்பத்தினரை நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், கோட்டாட்சியர் மணிராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், தமிழக அரசின் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.