கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தற்போது வரை ரூ.62 கோடியே 30 லட்சத்து 538 நிதி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கலாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து கடந்த மார்ச்31-ம் தேதி வரை ரூ.36 கோடியே 34 லட்சத்து 529 நிதி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்தது. தொடர்ந்து ஏப்ரல் 1 மற்றம் 2-ம் தேதிகளில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்துள்ளனர்.
இதில், சுந்தரம் பைனான்ஸ் லிட்- ரூ.4 கோடி, டாபே நிறுவனம் ரூ.3 கோடி, ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.2 கோடியே 50 லட்சம், பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.2 கோடி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ரூ.1 கோடியே 25 லட்சம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வி.பி.ஜெயபிரதீப் ரூ.1 கோடி உட்பட 2 நாட்களில் மட்டும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியே 96 லட்சத்து 9 சேர்ந்துள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ஆகும்.
முதல்வர் நன்றி
நிதி அளித்துள்ள நிறுவனம், பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.