கரோனா வைரஸ் தொடர்பான இடர்மிகுந்த சூழலில் வாசகர்கள் பலரும் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்ற தடுமாற்றத்தையும் வெளியிட்டபடி இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நிபுணர்களிடம் கொண்டு சென்று உரிய பதிலைப் பெற்றுத் தர தயாராகிறது ‘இந்து தமிழ் திசை’! இதோ இங்கே அப்படி சில கேள்வி - பதில்கள்...
நான் கூட்டுறவு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளேன். அரசு அறிவித்துள்ள கடன் மற்றும் வட்டி நிறுத்திவைப்பு கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமா?
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி (TNSCB) மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி.சக்தி சரவணன் கூறும் பதில்:
கூட்டுறவு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி உள்ளவர்களுக்கும் 3 மாத கடன் தவணை தள்ளிவைப்பு உண்டு. ஆனால், அதன்பிறகு அந்த 3 மாத காலத்துக்கான வட்டியை செலுத்த வேண்டும். இந்த கடன் தவணை தள்ளிவைப்பு தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தனக்கு 3 மாத கடன் தவணை தள்ளிவைப்பு வேண்டும் என்று கோரி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அந்த கூட்டுறவு வங்கி மேலாளர் இந்த கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிறார்களே அது உண்மையாஉ நாங்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதா, வேண்டாமா?
பள்ளிக்கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் கூறும் பதில்:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை மாணவர்கள், பெற்றோர் நம்பவேண்டாம். வழக்கம்போல மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம். தற்போதைய சூழலின் தீவிரத்தை ஆராய்ந்து வருகிறோம். அரசு அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
வாசகர்களே…!
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் எதற்கு விதிவிலக்கு உண்டு; என்னென்ன செயல்களில் ஈடுபட அனுமதி கிடைக்கும்; எதனைச் செய்யலாம் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பதில் உங்களுக்கும் இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கேள்வியாக அனுப்பினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அல்லது நிபுணர்களின் பதில்களுடன் பிரசுரம் செய்யப்படும்.
இதுபோன்ற சந்தேகங்களை வாசகர்கள் press.release@hindutamil.co.in என்ற மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பலாம். மேலும் 044-42890002 என்ற ‘உங்கள் குரல்’ எண் வழியாகவும் கேட்கலாம்.