தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த்தொற்று 411 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சோதனையிட்டதில், பல்வேறு ஆய்வுகள் நடத்தியதில் நாம் இரண்டாம் கட்டத்தில் மட்டுமே இருக்கிறோம், சமுதாயப் பரவல் எனும் 3-ம் நிலையை அடையவில்லை என சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்ததாவது:
“இன்று வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 பேர். 28 நாள் முடிந்தவர்களின் எண்ணிக்கை 5080. சாம்பிள் டெஸ்ட் செய்தவர்களின் எண்ணிக்கை 3684. நேற்றுவரை தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 309. இன்று தொற்று எண்ணிக்கை 102. மொத்தம் எண்ணிக்கை 411 பேர். வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1580 பேர்.
எங்களிடம் போதுமான அளவு மாஸ்க் , பிபிஏ கருவிகள் உள்ளன. பாசிட்டிவ் வந்தவுடன் தனிமைப்படுத்தும் முயற்சிகளை உடனடியாக முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து விடுகிறோம். பாசிட்டிவ் வந்தவர்களில், 376 பேரின் சாம்பிள் எடுத்துள்ளோம். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் குறித்து சோதனை செய்ததில் 3 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது.
இன்னும் நாம் 2-வது கட்டத்தில் தான் உள்ளோம். மூன்றாவது நிலையான சமுதாயப் பரவலுக்குள் வரவில்லை. வயதானவர்களை, நீரிழிவு, ரத்த அழுத்தம், தீவிர நோயுற்றவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்கள் தாராளமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். அங்கு சிகிச்சை பெற விரும்புவோர் சிகிச்சை பெறலாம்.
கரோனாவைக் கட்டுப்படுத்துவது ஒன்றுதான் எங்கள் குறிக்கோள். முழுக்கவனமும் அதில்தான். தனிமைப்படுத்தி 5 கி.மீ. மட்டும் பஃபர் ஜோன் செய்யும் வேலையை உடனடியாக செய்கிறோம். வீட்டுக்கு வீடு ஆய்வில் முழுவீச்சில் ஈடுபடுகிறோம். நேற்று 5000 களப்பணியாளர்கள் களத்தில் இருந்தனர். இன்று அதைவிட அதிகமானோர் செயல்படுகின்றனர். 5 லட்சம் பேரைக் கணக்கெடுத்துள்ளோம்.
இன்று தொற்று உறுதியான 102 பேரில் 100 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்தவர். ஒருவரின் பயண வரலாற்றை ஆராய்ந்து வருகிறோம். இது பயப்படும் நோயல்ல. இதுவரை சிகிச்சையில் உள்ள அனைவரும் சாதாரணமாக, நலமாக உள்ளனர்.
இது ஒரு நோய். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எங்கெல்லாம் பாதிப்பு வந்ததோ அதையெல்லாம் சோதித்துள்ளோம். வர வர மற்றவர்களுக்கும் சோதனை நடத்துகிறோம். இது ஏதோ நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. உலக சுகாதார நிறுவனம் இது ஒரு உலகலாவிய ஆபத்தான தொற்று நோய் என்று அறிவித்தவுடன், அதாவது ஜனவரி 18-ம் தேதியிலிருந்தே நாங்கள் கண்காணிப்பை ஆரம்பித்துவிட்டோம்.
இதை திடீரென்று செய்யவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 2 அல்லது 3 பேர் தான் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் உள்ளவர்கள், சிகிச்சை அளிக்கும்போது நாங்கள் சொல்லும் வழிமுறையில்தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
நேரடித் தொற்று இல்லாமல் தொற்று உறுதியான 376 பேரைத் தனியாக ஆய்வு செய்தோம். அது இல்லாமல் காய்ச்சலையும் தனியாகக் கண்காணிக்கிறோம். எங்காவது காய்ச்சல் ஏற்படுகிறதா என தனியாகக் கண்காணிக்கிறோம்”.
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.