ஊரடங்கால் பிழைப்பின்றி இருப்பதால் அரசு 3 வேளை உணவு வழங்க கோரிக்கை விடுத்த நரிக்குறவ காலனி மக்கள் 
தமிழகம்

ஊரடங்கால் பிழைப்பின்றி உள்ளதால் 3 வேளை உணவு வழங்க வேண்டும்: ராமநாதபுரத்தில் நரிக்குறவ மக்கள் கோரிக்கை 

கி.தனபாலன்

ராமநாதபுரம் காட்டூரணி எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலனி மக்கள் ஊரடங்கால் பிழைப்பின்றி உள்ள அனைவருக்கும் அரசு 3 வேளை உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலனி மக்கள் அனைவரும் பாசி மணிகள், ஊசி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் இவர்கள் வருமானமின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அதனால் அரசு 3 வேளைக்கும் உணவு வழங்க வேண்டும் என நேற்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விஜயா என்ற பெண் கூறியதாவது, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். சம்பந்தமில்லாதவர்கள் எங்கள் பகுதிக்குள் இருச்சக்கர வாகனங்களில் சுற்றி வருகிறார்கள்.

அவர்களிடமிருந்து எங்களுக்கு கரோனா பரவுவதைத் தடுக்கவே சாலையில் தடுப்புக் கம்புகளை கட்டி வைத்துள்ளோம். நரிக்குறவர் குடியிருப்பில் உள்ள 200 குடும்பங்களில் 50 குடும்பங்களுக்கே குடும்ப அட்டை உள்ளது.

அதனால் மீதி உள்ளவர்கள் அரசின் கரோனா நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளது. அதனால் உணவுக்கு வழியில்லாத நிலையில் பலர் கஷ்டப்படுகின்றனர்.

எனவே அரசு இங்குள்ள அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் அல்லது 3 வேளையும் உணவு வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT