தமிழகம்

நெல்லையில் ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் மும்முரம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலியில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ள நிலையில் மேற்கொண்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றும் பணிகள் தொடங்கியிருக்கிறது.

இந்த ரயில் நிலையத்தில் பிட்லைனில் நிறுத்தப்பட்டுள்ள14 ரயில் பெட்டிகளை தனிவார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வார்டு பெட்டிகளில் 3 கழிப்பறைகள் இருக்கும். அதில் ஒன்று மேற்கத்திய வடிவில் இருக்கும். ஒரு குளியலறை இடம்பெறும். பெட்டிகளில் நடுவேயிருக்கும் படுக்கைகள் அகற்றப்படுகின்றன.

ஒவ்வொரு பெட்டியிலும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வைக்க தனிஇடம் ஒதுக்கப்படுகிறது.

ஒவ்வொரு பெட்டியிலும் 15 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியும். குளீருட்டப்பட்ட வசதியுள்ள பெட்டிகளை சிறப்பு வார்டுகளாக மாற்றாமல், 2-ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளையே தேர்வு செய்து, மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றும் பணிகள் முடிவுற்றபின்னர், ரயில்வே உயர் அதிகாரிகளை இவற்றை பார்வையிடுவார்கள். அதன்பின்னரே இவற்றை மருத்துவத்துறையின் பயன்பாட்டுக்கு அளிக்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT