கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எஸ்பிகே அண்ட் கோ குழுமத்தின் தலைவர் நா.செய்யாத்துரை ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கரோனாவை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக எடுத்து வருகின்றது. காவல்துறையினர், மருத்துவத் துறையினர், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதரப்பினரும் கடுமையாகப் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 411 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கரோனா சிகிச்சை பணிகளுக்காக பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், ஆசிரியர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை, அருப்புக்கோட்டை 'எஸ்பிகே அண்ட் கோ' குழுமத்தின் தலைவர் நா.செய்யாத்துரை ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இன்று (ஏப்.3) தமிழ்நாடு மெர்கண்டைன் வங்கி மூலமாக இந்த நிதியுதவியை செய்யாத்துரை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.