144 தடை உத்தரவு நம்மைப் பாதுகாக்க போடப்பட்ட சட்டம். அதன் அருமை உணர்ந்து பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்கத் தவறினால், உங்களைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இன்று வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடைகளை வழங்கிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:
“கொடிய வைரஸ் நோய் தொற்றி உள்ளது. இந்திய அளவிலும் பல மாநிலங்களில் வைரஸ் நோய் பரவியுள்ளது. தமிழகத்திலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வெளிமாநிலங்கள் ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட 7 மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
பிரதமரின் வழிகாட்டுதல்படி வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் 3409 பேர், உணவகங்கள் பணியாற்றுபவர்கள் 4953 பேர் என மொத்தம் 1,34,569 பேர் உள்ளனர். பிற மாநில முதல்வர்களின் வேண்டுகோளின்படி அவர்கள் தனி முகாம்களில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நாங்கள் எடுத்து வைத்த கோரிக்கையை அந்தந்த மாநில அரசுகள் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. பல மளிகைப்பொருட்கள் வேறு மாநிலங்களிலிருந்து வரவேண்டியுள்ளது. அதைக் கொண்டு வரும் லாரிகள் அதிகம் இயக்கப்படுவதில்லை. அதுவும் ஒரு காரணம். அதனால் மளிகைப்பொருட்கள் தட்டுப்பாடு உள்ளது. பிரதமர் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களைத் தடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் அதிகமாக வெளியே சுற்றுகிறார்கள் அதைத் தடுக்க பத்திரிகைகாரர்கள் தான் உதவ வேண்டும். இது கொடிய தொற்று நோய். அது எப்படிப் பரவுகிறது என்பதை அனைவரும் பார்க்கிறீர்கள். ஆனால், சிலபேர் அந்த நோயின் தீவிரம் பற்றி அறியாமல், புரியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். ஊடகங்கள் மூலமாக நான் கேட்டுக்கொள்வது. இது ஒரு மோசமான நோய். அதற்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே, எனது வேண்டுகோள். ஊரடங்கைக் கடைப்பிடிக்க ஒத்துழையுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை அதிமாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகைகள் 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்காகவோ, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதற்காகப் போடும் தடையல்ல. நம்மைப் பாதுகாக்க போடப்பட்ட சட்டம். அதன் அருமை உணர்ந்து பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என பொதுமக்களை அனைத்துத் துறைகளும் கேட்டுக்கொள்கின்றன. ஆகவே, பொதுமக்கள் இந்த நோய்த் தொற்று பரவாமல் இருக்க தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாவசியப் பொருட்களுக்காக லாரிகளை அனுமதிக்க வேண்டும். அதற்கு ஓட்டுநர், கிளீனர்களை அனுமதிக்க வேண்டும். லோடு இறக்க ஆட்களை இறக்க அனுமதிக்க வேண்டும். பொருட்களை விற்க, வாங்க பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். இப்படி அனுமதிக்கும்போது சமுதாய விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறோம். தினமும் பொருட்களை வாங்க வெளியில் வராதீர்கள். வாரம் ஒருமுறை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறோம். ஆனால், அதைக் கடைப்பிடிக்காதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.
ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு எவ்வளவு ஒத்துழைப்பு தர வேண்டுமோ அந்த அளவுக்கு ஒத்துழைப்பைத் தருகிறோம். பொதுமக்கள் அதை மதிக்கத் தவறினால் உங்களைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறோம். ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு வழங்குகின்ற சம்பளம் எவ்விதப் பிடித்தமும் செய்யப்படாமல் வழங்கப்படும். அதிக விலைக்கு மளிகைப்பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் சங்கத் தலைவர்களிடம் கூறியுள்ளோம். அவர்களும் அதுகுறித்து வேண்டுகோள் வைத்துள்ளனர். பார்ப்போம்.
காவல்துறை மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றியதாக 45,046 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 50,393 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். 37,760 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வதந்தி பரப்பியதாக 95 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவுப்பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வாங்க முடியாதவர்கள் இம்மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். பத்திரிகை ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.