ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டு, சம்பள நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது என அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது தடைபட்டுள்ளது.
இவர்களுக்கு வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் வழங்க மறுக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இருப்பினும் சம்பள வெட்டு மற்றும் சம்பள நிறுத்தம் செய்யப்படும் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில இணைப் பொதுச் செயலர் எஸ்.சம்பத் கூறியதாவது:
ஊரடங்கால் பணி நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் சாதாரண தொழிலாளிக்குக் கூட சம்பள இழப்பை ஏற்படுத்தாமல் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு போல் கருத வேண்டும் என இந்திய பிரதமரும், பல மாநில முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு எதிராக தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பள வெட்டு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர் பணி விதிகளிலும், சம்பளப் பட்டுவாடாச் சட்டங்களிலும் முன்னறிவிப்பு கொடுக்காமல் பணிக்கு வராமல் இருந்தால் கூட முன்னறிவிப்பு கொடுக்காமல், சம்மந்தப்பட்ட தொழிலாளியிடம் விளக்கம் பெறாமல் ஊதிய பிடித்தம் மேற்கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையே மத்திய அரசு அண்மையில் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி அமைத்ததிலும் கூறப்பட்டுள்ளது. மிகுந்த நஷ்டம், பிரச்சினை காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையிலும் கூட உரிய முன்னறிவிப்பு கொடுத்து, விளக்கம் பெற்ற பிறகே ஊதிய வெட்டு என்பதை தொழிலாளர் சட்டங்கள் அனுமதிக்கிறது.
தற்போது ஊழியர்கள் யாரும் அவர்களாக பணிக்கு செல்லாமல் இருக்கவில்லை. மாறாக அரசுகள் தான் அவர்களை வீட்டிற்குள் இருக்கச் சொல்லியுள்ளது. அவ்வாறிருக்க சம்பள வெட்டு என்பது சட்ட விரோதமாகும்.
முன்னறிப்பு இல்லாத சம்பள வெட்டு, சம்பள நிறுத்தத்தை முந்தைய சம்பளப் பட்டுவாடாச் சட்டம் மற்றும் தற்போதைய சம்பளச் சட்டத் தொகுப்பும் அங்கீகரிக்கவில்லை.
தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் தனி நபர்களின் தனி மனித பொறுப்புகள் நீங்கிவிட்டதாக கருத முடியாது. கடன்கள் 2 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் திரும்ப செலுத்தித்தான் ஆக வேண்டும். எனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டு, சம்பள நிறுத்தத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.