கரோனா தொற்று பாதித்தவருடன் தொடர்பிலிருந்த கரூரைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் 71 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 28 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், மருத்துவ கண்காணிப்பில் உள்ள 43 பேரில் 9 பேரின் பரிசோதனை ஆய்வுமுடிவு இன்று(நேற்று) தெரியவரும். மற்ற 34 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரானோ பாதித்த ஒருவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையிலும், தோகைமலையைச் சேர்ந்த மற்றொருவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.டெல்லி சென்று திரும்பிய 36பேர் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 3 பேர் என 39 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் 1 நாள் ஊதியம் ரூ.14.10 கோடி வழங்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.