பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்; ஐஓசி விளக்கம்

ஆர்.கிருஷ்ணகுமார்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் தென்மண்டல பொதுமேலாளர் ஆர்.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஏப்.2) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"ஊரடங்கு உத்தரவால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்று வாடிக்கையாளர்கள் அச்சமடையத் தேவையில்லை. வழக்கம்போல சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். தேவையான அளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஐஓசி, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களில் தேவையான அளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பில் உள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் 900 விநியோகஸ்தர்கள் மூலம் 1.30 கோடி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.20 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிலிண்டருக்கான விற்பனை விலை, உஜ்வாலா பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முன்கூட்டி செலுத்தப்படும். அந்த தொகையைப் பயன்படுத்தி, சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களைப் பெற குரல் பதிவு அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண் மூலமாக முன்பதிவு செய்யலாம். மேலும், 75888 88824 என்ற எண்ணில் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் மூலமாகவும் எரிவாயு சிலிண்டருக்கு பதிவு செய்யலாம். இந்தியன் ஆயில் ஒன் செயலி வழியாகவும், இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து சிலிண்டர் பெறலாம்.

ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு, 15 நாட்கள் இடைவெளியில் மட்டுமே அடுத்த சிலிண்டருக்குப் பதிவு செய்ய வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT