கோவிட்-19 நோயைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீதான பேரிடர் மேலாண்மைச் சட்டம், ஐபிசி 188-ன் கீழ் எடுக்கப்படும் தண்டனை, நடவடிக்கைகள் பற்றி பொதுமக்களிடம் பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என ம்த்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலர் அஜய்குமார் பல்லா மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்த செய்திக்குறிப்பு:
''நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக, மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய முழு அடைப்பு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி தங்களுக்குள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, முழு அடைப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கெனவே எழுதியிருந்தது.
இதை மீண்டும் வலியுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் (IPC) 188 ஆகியவற்றின் கீழ் உள்ள சட்டங்களின் படி, முழு அடைப்பு நடவடிக்கைகளை மீறினால் எடுக்கக்கூடிய தண்டனை விவரங்கள் குறித்து, பொது மக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
முழு அடைப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதில் சமரசத்துக்கு இடமில்லை.
ஊரடங்கை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் (51-60) கீழும், ஐபிசி 188-ன் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அஜய்குமார் பல்லா தெரிவித்துள்ளார்.