தமிழகம்

ஊரடங்கு உத்தரவால் வருமானத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் சுற்றுலா வழிகாட்டிகள்

என்.சுவாமிநாதன்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இவர்களுக்கு வழிகாட்டும் தொழிலில் இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் ஊரடங்கால் பிழைப்புக்கு வழியின்றி நிற்கிறார்கள்.

கன்னியாகுமரியில் மட்டுமே சூரிய உதயம், அஸ்தமனம், காந்தி, காமராஜர் மண்டபங்கள், கடல் நடுவே கம்பீரமாக நிற்கும் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமாயணக் காட்சிக் கூடம், கடல் திருப்பதி தேவஸ்தான கோயில் என பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களை நீண்ட பட்டியலாகவே போடலாம்.

இதேபோல் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் என சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் பகுதிகள் குமரி மாவட்டத்தில் ஏராளம். குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மாவட்டம் முழுவதையுமோ, அல்லது கன்னியாகுமரியை மட்டுமோ சுற்றிக்காட்டும் வகையில் கன்னியாகுமரி காவல் நிலையப் பேருந்து நிலைய நிறுத்தத்திலேயே இயங்குகிறது குமரி முனை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம்.

காலம் காலமாக கன்னியாகுமரியில் டூரிஸ்ட் கைடுகளாக இருந்தவர்கள், தங்களுக்குள் ஒன்றிணைந்து 1986-ம் ஆண்டு இந்த சங்கத்தைத் தொடங்கினார்கள். கடந்த 34 ஆண்டுகளாக இயங்கும் இந்தச் சங்கம், இப்போது கன்னியாகுமரியின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தச் சங்க அலுவலகமே இப்போது ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் தங்களின் வாழ்வாதாரத்தையும் ஊரடங்கால் இழந்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகி பெலிக்ஸ் கூறுகையில், “இந்த சங்கத்தில் 44 பேர் உறுப்பினரா இருக்கோம். குமரி மட்டும்ன்னு இல்லாம நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவங்களும் இங்கே உறுப்பினர்களா இருக்காங்க. ஆரம்பத்தில் 60 பேருக்கு மேல வேலை செஞ்சோம். ஆனா, இணைய வளர்ச்சியால் பெரும்பாலானவங்களுக்கு இன்னிக்கு கூகுள் மேப்பே கைடாகிடுச்சு. அதனால ஏற்கெனவே பாதிப்பேரு வேலைய விட்டுப் போயிட்டாங்க. போதாதுக்கு இப்போ தொடர்ச்சியான ஊரடங்கு எங்க வாழ்க்கையை சுத்தமா முடக்கிப் போட்டிருக்கு.

மொத்தம் இருக்குற 44 பேருல, ஒரு நேரத்துல 22 பேரு வேலை செய்வோம். இது ஷிஃப்ட் முறை. ஒரு டியூட்டி 24 மணிநேரம். இன்னிக்கு காலைல பத்து மணிக்கு ஆரம்பிச்சா, நாளைக்கு காலைல 10 மணி வரை கணக்கு. அடுத்த நாள் அவுங்களுக்கு விடுமுறை. 22 பேரு, ஒரு நேரத்துல வேலை செஞ்சாலும் 22 சுற்றுலாப் பயணிகள் வர மாட்டாங்க. பள்ளிக்கூட விடுமுறை நேரமான ஏப்ரல், மே மாதங்கள், தீபாவளி, பொங்கல், ஓணம் சீசன்கள், சபரி மலை சீசன், தொடர் விடுமுறைக் காலங்களில் எங்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

ஆனால், சாதாரண நேரங்களில் நாள் ஒன்றுக்கே, நான்கு, ஐந்து பேர் தான் வருவார்கள். அதனால் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்தாலும், அதற்கு சங்கத்தின் மூலமாகவே, சுற்றுலா வழிகாட்டிகள் அனுப்புவாங்க. கிடைக்கும் வருமானம் அன்னிக்கு டூட்டியில் இருக்கும் 22 பேருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும். ஏற்கெனவே அந்த அளவுக்கு தொழில் பலவீனமா போயிட்டு இருக்கு.

இந்த நிலையில, சீசன் டைமான இந்த நேரத்துல 21 நாள் ஊரடங்குல போயிடுச்சு. 14-ம் தேதியோட ஊரடங்கு முடிஞ்சாலும் மக்கள் சுற்றுலா வர்ற அளவுக்கு பொருளாதார பலத்தோட இருக்க மாட்டாங்க. மொத்தத்தில் இந்த கரோனா, சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்க்கையை நிர்மூலமாக்கிடுச்சு. அரசு எங்க நிலைமையையும் கவனத்துல எடுத்து நிதி உதவி செய்யணும்” என்றார்.

SCROLL FOR NEXT