கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், பல்வேறு இடங்களில் அத்தியாவசிய தேவை எதுவும் இன்றி சாலைகளில் பொதுமக்கள் சுற்றித் திரிகின்றனர்.
எந்த அத்தியாவசிய காரணமும் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்கின்றனர். அவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுகித்து வருகின்றனர். மேலும், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 144 தடை உத்தரவை மீறியதால், 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 பேரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும், 633 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் சுற்றித் திரிவது தொடரவே செய்கிறது.
இந்நிலையில், கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த சுரண்டை அருகே உள்ள தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் ஊருக்கு வரும் வழியை அடைத்தனர்.
வெளியாட்கள் யாரும் ஊருக்குள் வர தடை விதித்த பொதுமக்கள், தங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் சென்றால், ஊருக்கு திரும்பி வரும்போது, கை, கால்களை சோப்பால் கழுவிவிட்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தி, தண்ணீர், சோப் ஆகியவற்றையும் அருகில் வைத்தனர்.
இந்நிலையில், தென்காசி அருகே உள்ள ஆசாத் நகருக்கு செல்லும் 2 வழிகளையும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று அடைத்தனர்.
காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் தவிர வெளியாட்கள் ஊருக்குள் வரக் கூடாது என்று அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர்.