தமிழகம்

ஊரடங்கு உத்தரவை மீறி கேளிக்கை:  தூத்துக்குடி ஆபீசர்ஸ் கிளப்புக்கு சீல்- நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட இந்தியன் ஆபீசர்ஸ் கிளப்புக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவையான காய்கறி, பலசரக்கு, பால், மருந்து கடைகளை தவிர அனைத்து வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே டி.ஆர்.நாயுடு தெருவில் உள்ள இந்தியன் ஆபீசர்ஸ் கிளப் ஊரடங்கு உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.

பல விஜபிக்கள் இந்த கிளப்பில் கூடி கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு புகார் அளித்தனர்.

அதன்பேரில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்த கிளப்பில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடையை மீறி பலர் கூடியிருந்ததும், கேளிக்கையில் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

அதிகாரிகளை கண்டதும் சில விஐபிக்கள் நைசாக வெளியேறிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து அங்கு எஞ்சியிருந்த மேலாளர் இளங்கோ, காவலாளி கருப்பசாமி, ஊழியர் ரவிச்சந்திரன், நிர்வாகி அந்தோணி ஆகிய 4 பேரையும் கைது செய்து, கிளப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும், அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 சைக்கிள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், தடை உத்தரவை மீறியதாக அவர்கள் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT