முதல்வர் நிவாரண நிதிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கடினமான சூழ்நிலையில், தமிழக மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும், பொதுப் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் பொதுசேவை நிறுவனங்களுக்கும் எனது சிரம்தாழ்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா பாதிப்பில் இருந்து நம் மக்களைப் பாதுகாக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எனது மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடி நிதி அளிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இந்தக் கரோனா நோயில் இருந்து உலக மக்கள் அனைவரும் குணமடைந்து தமிழகம், இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.