குமரி மாவட்டத்தில் வெளியூர் காசநோயாளிகள் இருந்தால் ஊரடங்கை முன்னிட்டு இங்கேயே சிகிச்சையை தொடருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காசநோய் தடுப்பு துணை இயக்குனர் வி.பி.துரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்; தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோயாளிகள் குமரி மாவட்டத்தில் கண்டிறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடைமுறையில் காசநோயாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு காசநோய்க்கான மாத்திரைகள் அவர்களுக்கு வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு ஒருமுறை இதுபோன்று மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கான மொத்த காலம் 6 மாதமாகும்.
தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் குமரி மாவட்டத்தில் சிகிச்சை பெறும் 625 காசநோயாளிகளுக்கும் அரசு உத்தரவுப்படி களப்பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று 2 மாதத்திற்கான மாத்திரைகளை கொடுத்து விட்டனர்.
எனினும வெளிமாவட்டத்தில் சிகிசையில் இருந்து தற்போது குமரியில் யாராவது தங்கியிருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அணுகினால் மாத்திரைகள் வழங்கப்படும்.
அல்லது 04652 298073, 9791495886 என்ற எண்களில் அழைத்தால் வீட்டிலேயே களப்பணியாளர்கள் வந்து மாத்திரைகளை வழங்குவார்கள்.
இதைப்போல் குமரியில் சிகிச்சை பெறும கேரள மாநிலத்தவரை சேர்ந்தோர் அங்கு சென்றுவர முடியாமல் இருந்தால் விவரங்களை தெரிவித்தால் சிகிச்சையை தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். காசநோயாளிகள் எக்காரணம் கொண்டும் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டாம் என்றார்.