தமிழகம்

மதுரை ‘கரோனா’ ஆய்வு மையத்தில் 'சோதனை கிட்' இல்லை: முடிவை உடனடியாக அறிய முடியாமல் நோய் அறிகுறியுள்ளவர்கள் தவிப்பு 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ‘கரோனா’ கண்டறியும் சோதனை மையத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால் இப்பொழுது வரை அதற்கான RTPCR 'சோதனை கிட்' எதுவும் வழக்கப்படாததால் நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக இந்த ஆய்வு முடிவை அறிய முடியாமல் தவிப்பதாக தேசிய வைரஸ் ஆய்வு இயக்குநருக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

மதுரை நகரில் 2518 படுக்கை வசதிகளோடு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள 6 மாவட்டங்களுக்கு இதுவே முக்கிய மருத்துவமனை. கடந்த 10 தினங்களுக்கு முன்னர், இந்த மருத்துவமனைக்கு ‘கரோனா’(கோவிட்-19) கண்டறியும் சோதனை மையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது.

இருந்த போதிலும், இன்றளவிலும் ‘கரோனா’வை உறுதிப்படுத்தும் RTPCR 'சோதனை கிட்' உங்களிடமிருந்து வரவில்லை. ஒவ்வொரு நாளும் மதுரை மருத்துவமனையிலிருந்து சோதனை மாதிரிகளை தொலைவில் உள்ள, தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்கும் பணி நெருக்கடியால்சோதனை கிட் தீரும் நிலை உருவாகின்றது.

அடுத்த கட்ட மருத்துவத்தை உடனடியாக துவக்க முடியாமல், இந்த சோதனை முடிவு வழிகாட்டுதலுக்காகக் மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள், இன்னொருபக்கமோ 'முடிவு என்னவானதோ?' என 24 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் காத்திருக்கிறார்கள். மிகுந்த வலிநிறைந்த காத்திருப்பாக இது இருக்கிறது.

'குறித்த நேரத்தில், உரிய சோதனை ஒன்றே, கரோனாவில் இருந்து இந்த தேசத்தைக் காக்கும்', என்ற சூழலில் இப்போதைய தாமதம், வலியையும் வருத்தத்தையும் உருவாக்குகின்றது. நெருக்கடி அதிகரித்துவரும் சூழலில், சோதனையின் முடிவுதான் மக்களை ஆசுவாசப்படுத்தும் ஒரே இடம். ஆதலால், போதிய அளவு சோதனை கிட்- களை போர்க்கால அடிப்படையில் அளித்திட கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளர்.

SCROLL FOR NEXT