‘கரோனா’ வேகமாகப் பரவுவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க மதுரையில் இறைச்சி கடைகள் ஊரடங்கு முடியும் 14ம் தேதி வரை மூடப்படுகிறது என்று மதுரை நகர் ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த வாரம் மதுரையில் இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நெல்பேட்டை இறைச்சி சந்தைகளில் ஆயிரக்கணக்காண மக்கள், மீன், ஆட்டு இறைச்சி, கோழிக்கறி வாங்கக் குவிந்தனர்.
கரோனா வேகமாகப் பரவும் நிலையில் இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரை நகர் ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர், மதுரையில் ஆட்டு இறைச்சி விற்பனையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனையின் பேரில் கொடுமையான ‘கரோனா’ வைரஸ் நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக வரும் 14ம் தேதி வரை மதுரை மாநகரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூடுவது என்றும், எந்தவிதமான ஆடுகளும் வதை செய்யப்படாது என்றும், ஆட்டு இறைச்சி நடைபெறாது எனவும் அறிவிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.