நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் கிராமத்தை முழுவதுமாக போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கிராமத்திற்கு செல்லும் வழிகளை அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ளது கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமம்.
இந்த கிராமத்தில் இருந்து இரண்டு பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பினர். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தியதில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் 250 குடும்பங்கள் வசித்துவரும் கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்தை வருவாய்த்துறையினர், போலீஸார் முடக்கினர்.
கிராமத்தை தனிமைப்படுத்த முடிவு செய்து கிராமத்திற்கு செல்லும் வழிகளில் தடுப்பு வேலிகள், கற்கள், முட்கள் கொண்டு அடைத்தனர். கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வருவாய்த்துறையினர் நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜின் தலைமையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கிராமத்தில் இருந்து வெளியே இருசக்கரவாகனத்தில் செல்ல முயன்றவர்களுக்கும் அவர்களை தடுத்த போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் நிலக்கோட்டை டி.எஸ்.பி., பாலகுமாரன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.