தமிழகம்

போக்குவரத்து முடக்கத்தால் தவிப்பு; வங்கி ஊழியர்களை வீட்டருகே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி ஊழியர்களை அவரவர் வீட்டருகே உள்ள கிளைகளில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, கூட்டமைப்பின் தமிழக பிரிவு பொதுச் செயலாளர் ஜி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மற்றும் தனியார் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் வங்கிக்கு வருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், 20.4 கோடி ஜன்தன் வாடிக்கையாளர்கள், 8.7 கோடி விவசாயிகள், 3 கோடி முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கும் உதவித் தொகை வழங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணம், இன்று முதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியின் தினசரி பணிகளுடன், ஓய்வூதியம் வழங்குதல், அரசு மற்றும் பெரு நிறுவன ஊழியர்களுக்கு மாத ஊதியம் அளிப்பது ஆகியவை ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருக்கும் பணிகளாகும்.

இதனிடையே, ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் பலர் தங்கள் வேலையிடத்தில் இருந்து தொலைவில் உள்ள இடங்களில் சிக்கிக் கொண்டதால் பணிக்கு வர முடியாமல் உள்ளனர். எனவே, தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் ஊழியர்கள் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள கிளைகளில் பணியாற்றவும் அனுமதிக்க வேண்டும்.

சமூக விலகலை மனதில் கொண்டு, வங்கிகளுக்கு வரும் ஊழியர்களுக்கு வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி, கருவுற்ற மற்றும் நோயுற்ற ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் பணிக்கு வருவது, அலுவலக நேரம் 4 மணி நேரமாக இருப்பது ஆகியவை தொடர வேண்டும். உதவித் தொகை வழங்குவதற்கான சிறப்பு கவுன்டர்கள் திறக்க வேண்டும். சமூக விலகலை நிலை நிறுத்தவும் பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு கொடுக்கவும் மாநில அரசு போதிய உதவிகளை செய்ய வேண்டும்.

வங்கி ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க சானிடைசர், சோப்பு மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும். அதேபோல், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினி, சோப்புகைகழுவும் கோப்பை ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT