தமிழகம்

கரோனாவை தடுக்க திருப்பூரில் ‘கிருமிநாசினி சுரங்கம்’- நூதன வடிவமைப்புக்கு மக்கள் பாராட்டு

இரா.கார்த்திகேயன்

திருப்பூரில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் காய்கறி சந்தையில் `கிருமிநாசினி சுரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பிரபலமான தென்னம்பாளையம் சந்தைக்கு தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் வணிகர்கள் வருவார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை யில் வழக்கமான கூட்டம் இல்லை யென்றாலும், ஓரளவுக்கு மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தென்னம்பாளை யம் சந்தைக்கு வருவோர் ஒரு சுரங்கம் வழியே செல்லும்போது, உடல் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் வகையிலான அமைப்பு வடிவமைக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டார்.

5 விநாடிகள் மழைச்சாரல்

இதை வடிவமைத்த தன்னார்வலர் வெங்கடேஷ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் தாக்குதலை உலக நாடுகள் எப்படி சமாளிக் கின்றன என்பதை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது, துருக்கி நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் அமைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. இதை திருப்பூரிலும் வடிவமைக்க முடிவுசெய்து, ரூ.1 லட்சம் மதிப்பில், 16 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட சுரங்கப்பாதையை வடிவமைத்தோம். மக்கள் சந்தைக்குள் நுழையும்போது இந்த சுரங்கத்துக்குள் கைகளை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைய வேண்டும். 5 விநாடிகள் அவர்கள் மீது மழைச்சாரல்போல கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படும். இதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக, சந்தையின் வெளிப் பகுதியிலும் இதுபோன்ற சுரங்கத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மக்கள் பாராட்டு

அதேபோல, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் தற்காலிக சந்தை, உழவர் சந்தைகள், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்குமாறு பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

குளோரின் எனப்படும் ஹைட்ரோகுளோரைடை தண்ணீரு டன் கலந்து தெளிப்பதால், சுரங்கப் பாதைக்குள் சென்று வரும் மக்களுக்கு கண் எரிச்சல் எதுவும் ஏற்படவில்லை. மக்களைப் பாதுகாக்கும் இந்த நூதன வடிவமைப்புக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT