கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் ஆன்லைன் மூலமாக அவசர வழக்குகளை தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை விளக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றம் உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் வரும் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் மட்டுமின்றி கீழமை நீதிமன்றங்களிலும் அவசரம் எனக்கருதும் வழக்குகளை மட்டுமேஆன்லைன் மூலமாக விசாரிக்க வேண்டும் என்றும் குறைபாடுள்ள வழக்குகளை நீதிமன்றம் திறந்தபிறகு தெரிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவசர வழக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை எந்தவொரு விளக்கமும் அளிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அவசர வழக்குகளை ஆன்லைன் மூலமாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் மற்றும்தலைமைப் பதிவாளர் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது. ஆனால் அந்த வழக்குகளை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பதற்கான வடிவமைப்பு மாதிரிகள் இல்லை. சிரமத்துக்கு மத்தியில் மனுக்களை தயார் செய்து, வழக்கு ஆவணங்களை அனுப்பினால் அவை பதிவுத்துறைக்கு சென்றதா இல்லையா என்பதற்கும் பதில் வருவது இல்லை. இதனால் அந்த வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதும் தெரியாமல் வழக்கறிஞர்கள் மீண்டும் மீண்டும் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவுத்துறைக்கும் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.
ஆனால் காஞ்சிபுரம், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற ஒரு சில மாவட்டங்களில் ஜாமீன், முன்ஜாமீன் கோரி அவசர மனுக்களை தாக்கல் செய்வதற்காக அந்தந்த முதன்மை அமர்வு நீதிபதிகள், பிரத்யேகமாக வடிவமைப்பு மாதிரிகளை வெளியிட்டு மின்னஞ்சல் முகவரியுடன் கூடவே வாட்ஸ்அப் எண்களையும் வெளியிட்டுள்ளனர். இதனால் அவசர வழக்குகளை தாக்கல் செய்வது எளிதாக உள்ளது. அதுபோன்ற நிலையை உயர் நீதிமன்றத்திலும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரினர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாவட்ட நீதிமன்றங்களுடன் உயர் நீதிமன்றத்தை ஒப்பிடக் கூடாது. அவர்களின் ஆளுகை,பணிச்சூழல் வேறு. உயர் நீதிமன்றத்தின் ஆளுகை, பணிச்சுமை என்பது வேறு. தற்போது இக்கட்டான சூழலில் நீதித்துறை ஊழியர்களும் நீதிபதிகளும் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கப்படும் அவசர வழக்குகளுக்கு உரிய பதில்கள் இனி வழக்கறிஞர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.