கரோனா வைரஸ் பரவலைத் தடுக் கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருச்சி மாவட்டத்தில் செடிகளிலேயே பூக்கள் காய்ந்து கருகி வருகின் றன, தஞ்சை மாவட்டத்தில் மரத் திலேயே இலைகள் சருகாகி வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் கோப்பு, போசம்பட்டி, எட்டரை, போதாவூர், அரியாவூர், நல்லூர், நவலூர் குட்டப்பட்டு கிராமங்கள் மற்றும் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் மலர் சாகுபடியை விவசாயிகள் ஏராளமானோர் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மேற்கொண்டு வருகின் றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் திருச்சி காந்தி சந்தை மற்றும் ரங்கம் ஆகிய இடங்களில் உள்ள பூ சந்தைகள் மூடப்பட்டு விட்டதால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பூக்களைப் பறிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: விற்பனை செய்ய முடியாததால்
மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லிகை, செவந்தி, சம்மங்கி, சாமந்திப் பூக்களை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர். இதனால், அவை காய்ந்து கருகி வருகின்றன. இதனால் பூச்சித் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பூ சாகுபடி விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் கடும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். இதைத் தவிர்க்க தற்போது மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் பூ விற்க அனுமதிக்கவும், அந்த சந்தைகளுக்கு பூக்களை கொண்டு செல்லவும் ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்.
இதேபோன்று, வெட்டினாலும் விற்க வழியில்லை என்பதால், வெட்டப்படாமல் மரங்களில் பழுத்து வீணாகும் வாழைத் தார்களால் வாழை விவசாயிகள் கடும் நஷ்டத்துக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, பூ மற்றும் வாழை சாகுபடி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மரத்தில் கருகும் இலைகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி என காவிரி ஆற்றின் கரையோரத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாப்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் வாழை இலை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமும் 2 லட்சம் வாழை இலைகள் ஆம்னி பஸ், லாரிகள் மூலம் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு, வாழை இலை அனுப்பும் பணி பாதிக்கப் பட்டுவிட்டது. இதனால், இலைகள் மரத்திலேயே காய்ந்து சருகாகி வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மரத்தில் சருகாகிப் போன வாழை இலைகளை சுத்தம் செய்யவே பெரும் செலவு ஆகும். எனவே, வாழை விவசாயிகளின் நிலையை உணர்ந்து, உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.