கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் போலீஸாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய கபசுர குடிநீரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தடையை மீறுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ‘காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் அவர்களின் குடும்பத்தினரும் உடல்நலனை கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். எனவே, கவனமுடன் பணி செய்ய வேண்டும்’ என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்கெனவே கூறியிருந்தார். மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை பெருநகரில் பணிபுரிந்து வரும் போலீஸாருக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ‘கபசுர குடிநீர்’ வழங்கப்பட்டது. வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ‘கபசுர’ குடிநீரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்வின்போது கூடுதல்காவல் ஆணையர் (தலைமையிடம்) எச்.எம்.ஜெயராம், இணை ஆணையர் (தலைமையிடம்), ஏ.ஜி.பாபு, நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எம்.சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். போலீஸாரும் ஆரோக்கியமாக இருந்தால்தான் பணியை சிறப்பாக செய்ய முடியும்.