கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் கடந்த ஒன்றரை மாதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிராம்பு, நல்லமிளகு, அன்னாசிபழம் போன்ற மலைப்பயிர் பொருட்கள் தேக்கமடைந்தது. இதனால், ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைகிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாழ்வாதாரம் இனறி தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப்பயிர்களான தென்னை, ரப்பர், வாழை விவசாயம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர மேற்கு தொடர்ச்சி மலையில் மலைஜாதி மக்கள் வசிக்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, தச்சமலை, குற்றியாறு, கரும்பாறை, ஆறுகாணி, கீரிப்பாறை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், பேச்சிப்பாறை ஜீரோ பாய்ண்ட் பகுதி, மலை அடிவார கிராமங்களிலும் நறுமண பயிர்கள், மலைத்தோட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன.
இவற்றை பல எஸ்டேட் முதலாளிகள், மற்றும் குத்தகைதாரர்கள் பயிரிட்டிருந்தாலும், இதை நம்பி ஆயிரக்கணக்கான ஏழை மலைவாழ் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கிராம்பு, நல்லமிளகு போன்றவை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு குமரி மலைகிராமங்களில் இருந்து ஏற்றுமதி ஆகி வந்தன. இங்கிருந்து மருத்துவ குணமும், உயர்தர உணவிற்கு பயன்படுத்தப்படும்
கிராம்பு மாதம் தோறும் 100 டன்னிற்கு மேல் ஏற்றுமதி ஆகி வந்தது. குறிப்பாக ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சென்று வந்தன. இதே முக்கியத்துவம் நல்லமிளகிற்கும் இருந்தது.
ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் இரு மாதங்களாக சீனா உட்பட வெளிநாடுகளுக்கு கிராம்பு, நல்லமிளகு ஏற்றுமதி அடியோடு நின்றது. இதனால் இவை தேக்கமடைந்து பாதி விலைக்கு கூட விற்காமல் மலைதோட்ட பயிர் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதைப்போலவே குமரியில் 2500 ஹெக்டேருக்கு மேல் மலை, மற்றும் மலையோரங்களில் பயிரிடப்பட்டுள்ள அன்னாசி பழம் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு தேக்கமடைந்து அழிந்து வருகிறது.
இதுகுறித்து குற்றியாறு மலைகிராம விவசாயிகள் கூறுகையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி இன்றி தேங்கிய கிராம்பு, நல்லமிளகு, அன்னாசிபழம் போன்ற மலைப்பயிர்களால் ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இதை நம்பிய மலைகிராம தோட்ட தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
அறுவடை செய்த அன்னாசிபழத்தை வெளியூர்களுக்கும் அனுப்ப முடியாமல் கிலோ 8 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளூரில் விற்பனை செய்யும் நிலை உள்ளது. அதுவும் விற்பனை ஆகாமல் அழிந்து வருகிறது என்றனர்.