தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களைத் தங்கவைத்து கண்காணிப்பதற்காக தனியார் கல்லூரி கட்டிடங்களை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே காட்டுதீ போல பரவியது. இதனையடுத்து கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்களான திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளைமுகன்பட்டி ஆகியபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் மக்களை சமாதானபடுத்தி வெளியேற்ற முயன்றனர்.
ஆனால் நோய் உள்ளவர்களை இங்கு வந்து தங்க வைத்தால் எங்கள் பகுதி மக்களும் பாதிப்பார்கள், எனவே நீங்கள் இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து போலீசாரும் அதிகாரிகளும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.