தென்காசியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, 500 கிராம் சர்க்கரை, ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம்பருப்பு வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பொதுமக்கள் சந்தித்துள்ள துயரை நீக்க அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதம் ரூ.1000 உதவித்தொகை, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் மின்னணு குடும்ப அட்டை மூலம் குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்.
குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் வந்தாலும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் அடிப்படையில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.
நிவாரண உதவித்தொகை சுழற்சி முறையில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதி மற்றும் நேரத்தில் வழங்கப்பட உள்ளது என்ற விவரங்கள் உள்ள டோக்கன் வழங்கப்படும்.
மேலும், எந்த பகுதிக்கு எந்த தேதியில் விநியோகம் செய்யப்படும் என்ற விவரம் அடங்கிய அறிவிப்புப் பலகை நியாய விலைக் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும். எனவே, பொதுமக்கள் சிரமமின்றி அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி, நேரத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று நிவாரண உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
நிவாரணத் தொகையை பெற்றுகொள்ள வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் தூரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுதலின்றி நிவாரணம் வழங்கப்படும்.
பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சுகாதாரமான முறையில் சோப்பு போட்டு கைகழுவிவிட்டு, பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, 500 கிராம் சர்க்கரை, ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம்பருப்பு வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.