கழைக்கூத்தாடிகள், நரிக்குறவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.1) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம் முழுவதும் நாடோடிகளாக வாழ்கின்ற நரிக்குறவர்களுக்கும், கழைக்கூத்துக் கலைஞர்களுக்கும் குறைந்தபட்சம் அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட சில உணவுப்பொருட்களை நிவாரணமாக வழங்க தமிழக அரசு உடனடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதாவது, மாநிலம் முழுவதும் பரவலாக சுமார் 12 ஆயிரம் நரிக்குறவர் குடும்பங்களும், சுமார் 3 ஆயிரம் கழைக்கூத்துக் கலைஞர் குடும்பங்களும் இருக்கின்றன. பொதுவாக நரிக்குறவர்கள் ஊசி, பாசி, மணி கட்டி விற்பதில் ஈடுபடுவதும், கழைக்கூத்துக் கலைஞர்கள் மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டுவதில் ஈடுபடுவதும்தான் அவர்களின் அன்றாடத் தொழிலாக இருக்கிறது.
ஒரு நாளைக்கு தங்களின் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு ஒரு நாள் மட்டுமே குடும்பத்துக்காக செலவு செய்ய முடியும். மீதம் இருக்காது. அதுவும் நாள்தோறும் வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாத நிலையிலேயே வாழ்க்கை வாழ்கிறார்கள். இதனால் இவர்களுக்கு அடுத்த நாள் செலவுக்கு கையில் பணமோ, சாப்பிடுவதற்கு உணவுப்பொருட்களோ இருக்காது. மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்கின்ற இவர்களிடம் சேமிப்பு என்பதற்கு வழியே இல்லை. காரணம் இவர்களின் தொழில் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளைக்கூட முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்க முடியாது. இப்படித்தான் நரிக்குறவர்களும், கழைக்கூத்துக் கலைஞர்களும் தங்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்கிறார்கள்.
இந்நிலையில், தற்போதைய அசாதாரண சூழலில் நரிக்குறவர்களும், கழைக்கூத்துக் கலைஞர்களும் கடந்த ஒரு வார காலமாக அன்றாட உணவுக்கே பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் பொருளாதாரமும், உணவுப்பொருட்களும் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். இச்சூழலில் இவர்கள் அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட சில உணவுப்பொருட்களை ஒரு மாத காலத்திற்கு ஏற்ப நிவாரணமாக வழங்க கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் கரோனாவால் ஏற்பட்டுள்ள இப்போதைய அசாதாரண சூழலில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், தமிழக அரசு – மாநிலம் முழுவதும் சேமிப்பும், வருமானமும் இன்றி சிரமப்படுகின்ற நரிக்குறவர்களுக்கும், கழைக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட சில உணவுப்பொருட்களை நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.