தமிழகம்

கரோனா வைரஸ் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி குறைவு: 14 நாள் ஓட்டலில் தனிமைப்படுத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு போதிய அளவில் தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்படவில்லை.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு வார்டுகளில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் உள்ளனர். வைரஸ் பாதித்த நோயாளிகளின் உடல்நிலையை 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது, மருந்துகள் வழங்குவது, உணவுகொடுப்பது என இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். முற்றிலுமாக 21 நாட்கள் குடும்பத்தை பிரிந்து பணிபுரியும் இவர்களுக்கு நல்ல உணவு, தங்குமிடம் வசதி செய்து தரப்படவில்லை.

இதுதொடர்பாக கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் கூறியதாவது:

கரோனா வைரஸ் சிகிச்சைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் 3-ல் ஒரு பகுதியினருக்கு 7 நாட்களுக்கு பணி வழங்கப்படும். மீதமுள்ள 2 பகுதியினர் விடுப்பில் வீட்டில் இருப்பார்கள். முதல் பகுதியினர் பணியை முடிந்த பின்னர், 2-வது பகுதியினர் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு சுழற்சிமுறையில் அடுத்தடுத்த குழுவினர் பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில், 7 நாட்கள் மருத்துவமனையில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபின் வீடுகளுக்குச் செல்லும் நிலையில், எங்கள் மூலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையிடம் தெரிவித்தோம். இதற்கிடை யில் சில டாக்டர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய நடைமுறைபடி, 7 நாள் பணி. பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என மொத்தம் 21 நாட்கள் குடும்பத்தை பிரிந்திருக்க வேண்டும். செல்போன் பயன்படுத்தவும் விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

7 நாள் பணிக்கு பின்னர் மருத்துவமனை அல்லது கல்லூரி விடுதிகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்துகின்றனர். அங்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை. 21 நாட்கள் குடும்பத்தைப் பிரிந்து பணியாற்றும் எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் போது நல்ல ஓட்டல்களில் தங்க வைக்க வேண்டும். தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். குடும்பத்தினருடன் செல்போனில் பேச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT